சென்னை: சர்வதேச திரைப்பட விழாவில், இயக்குநர் ராமின் “பறந்து போ” மற்றும் நடிகர் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிச.11 முதல் டிச.18 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், நிறைவு நிகழ்ச்சியில் விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இயக்குநர் ராம் மற்றும் நடிகர் சிவா ஆகியோரின் கூட்டணியில் வெளியான “பறந்து போ” படம் “சிறந்த தமிழ் திரைப்படம்” எனும் விருதை வென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்துக்கு “2 ஆவது சிறந்த தமிழ் திரைப்படம்” எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்துக்காக நடிகர் சசிகுமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.