2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ம் தேதி வெளியானது. சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்த இந்த படத்தில், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து பணியாற்றியது. தமிழ்நாட்டில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி விநியோகம் செய்தது.

படத்திற்கு சூர்யா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதே நாளில் நானியின் ஹிட் 3, சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற பல படங்களும் வெளியானது. இவை போட்டியாக இருந்தாலும், ரெட்ரோ படம் தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் 17.75 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை 2டி நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இந்திய அளவில் மட்டும் இந்த படம் 27 கோடியைத் தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 3.07 கோடி, கேரளாவில் 2.5 கோடி வசூல் செய்துள்ளதாக அந்த மாநிலங்களின் விநியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வெளியான பிற மொழிப் படங்களுடன் கடும் போட்டியில் இருந்தாலும், சூர்யா படம் வசூலில் தக்க வைத்திருக்கிறதென ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் தற்போது உலகளாவிய வசூல் விவரத்தையும் வெளியிட 2டி நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.