தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சமீபத்திய கூட்டத்தில், புதிய திரைப்படங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 16.8.2024-ஆம் தேதியுடன் புதிய படங்கள் தொடங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டு, தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை சங்கத்திற்கு முறையாகக் தகவல் அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷிடம் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், நடிகர் தனுஷ் நிறைய தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் நிலையில் வரவிருக்கும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் வேலையைத் துவங்குவதற்கு முன்பாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தனுஷ் விவகாரம் மற்றும் படப்பிடிப்பு நிறுத்தம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும், மற்றும் நடிகர்களுக்கான கட்டுப்பாடுகள், வரவு செலவு விவகாரங்கள் போன்றவை விவாதிக்கப்படும்.
சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், “இந்த வருடம் செப்டம்பர் 8-ஆம் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். இதில் வரவு செலவுக் கணக்குகளை தாக்கல் செய்வோம். இரண்டு மூத்த நடிகர்களை கௌரவிக்கப் போவோம்; அதில் ஒருவர் நடிகர் டெல்லி கணேஷ், மற்றொருவர் இன்னொரு பழம்பெரும் நடிகை ஆவார்” என தெரிவித்தார்.
மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சினிமா துறையிலுள்ள பிரச்னைகள் மற்றும் தனுஷ் விவகாரத்தைப் பற்றிய தீர்வுகளைத் தேட வேண்டும் எனத் கூறினார்கள்.