தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், வெளிநாட்டில் பிரபலமான ஓடிடி தளமான டெண்ட்கோட்டாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் டென்ட்கோட்டா பிளாட்பாரம் இம்மாதம் முதல் தனது சேவையைத் தொடங்கும். டெண்ட்கோட்டா ஓடிடி இயங்குதளமானது தற்போதைய தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களையும், சங்கம் பரிந்துரைக்கும் படங்களையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வாங்கும்.
நிறுவனம் அவற்றை மொத்த தொகையாகவோ, குறைந்தபட்ச உத்தரவாத விலையிலோ அல்லது வருவாய் பங்கு அடிப்படையில் வாங்குவதாக உறுதியளித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட புதிய படங்களை எந்த முறையில் வாங்குவது என்பதை டெண்ட்கோடா முடிவு செய்யும்.
இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். 3 மாதங்களுக்குள் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை மட்டுமே சங்கம் பரிந்துரைக்கும்” என்றார். டெண்ட்கோட்டா ஓடிடி இயங்குதள இயக்குனர் முருகேசன் கணேசன் கூறுகையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.