சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனின் 22வது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பொருட்செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது.
இப்படத்தை கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். அட்லீக்கு இது 6வது படமாகும். சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இப்படத்தை இயக்குகிறார். இந்த நிலையில் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 21 வயதான சாய் அபயங்கர் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார்.
ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.