தற்போது ரஜினிகாந்துடன் கூலி படத்தின் வேலைகளை இறுதிப்படுத்தி வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானை வைத்து படம் எடுக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கூலி படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் அடுத்து யாருடன் பணியாற்றப்போகிறார் என்பது குறித்த ஆர்வத்துக்கு பதிலாக, ஆமீர் கானுடன் ஒரு புதிய படத்திற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதியாகி வருகின்றன. சமீபத்தில் ஆமீர் கான் வழங்கிய ஒரு பேட்டியில், லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் சப்பேரோ ஹீரோ படத்தில் நடிக்கப்போகிறேன் எனத் தெரிவித்தார். இந்த திரைப்படம் மிகுந்த பொருட் செலவில் உருவாகவுள்ளது என்றும், அதன் பணிகள் அடுத்தாண்டு ஆரம்பம் ஆகும் என்றும் கூறினார்.
ஏற்கனவே லோகேஷ் மற்றும் ஆமீர் கான் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சந்திப்பில் இருவரும் ஒரே படம் குறித்து ஆலோசனை செய்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான அடுத்த கட்ட நிர்வாக பணிகள் தற்போது நடந்து வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கூலி திரைப்படத்தில் ரஜினிக்கு துணையாக பல மொழிகளில் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஆமீர் கான் சிறிய கெமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அவரை வைத்து ஒரு தனி படத்தை இயக்குவது உறுதியாகி இருப்பது லோகேஷின் இயக்கத்தில் மேலும் ஒரு பெரிய அத்தியாயமாகவே கருதப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இதுவரை விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளதுடன், தற்போது அவரது இயக்கத்திலான கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ், இரும்புக்கை மாயாவி போன்ற திட்டங்கள் காத்திருக்கின்றன. இந்த நிலையில் பாலிவுட்டில் ஆமீர் கானை வைத்து எடுக்கவுள்ள படம் அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான தடமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த படம் ரஜினியின் கூலி ரிலீசுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.