ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிக் இயக்கத்தில் அஜித் குமார் மீண்டும் நடிப்பார் என்றும், இதன் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு இதுவரை மூன்று கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்றுள்ளார். மூன்றிலும் அவரது அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், ஐரோப்பாவில் நடைபெறும் GT4 கார் பந்தயத்தின் 3-வது சுற்றில் பங்கேற்க அஜித் குமார் தயாராகி வருகிறார்.
இதற்காக, அவர் பெல்ஜியம் சென்று அங்குள்ள ஸ்பா பிரான்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் பயிற்சி பெற்று வருகிறார். புதிய தோற்றத்தில் மொட்டையடித்த தலையுடன் அங்கு பயிற்சியில் பங்கேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.