சென்னை: சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு மாத வாடகைக்கு 2021 ஆண்டு முதல் ரூ. 20,000 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டு தங்கியுள்ளார். சென்னையில் சினிமா ஷூட்டிங் நடக்கும்போதெல்லாம் கஞ்சா கருப்பு இங்கேயே இருப்பார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
அந்த புகாரில் கஞ்சா கருப்பு என்பவர் ரூ. 3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார். மேலும், அந்த வீட்டை வேறொருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மது அருந்திவிட்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வீட்டை லாட்ஜ் ஆக்கியுள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறினார்.
இதேபோல், கஞ்சா கருப்பு போலீசிலும் ஆன்லைனில் புகார் அளித்தார். அதில், வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த உரிமையாளர், பொருட்களை சேதப்படுத்தினார். கலைமாமணி விருது மற்றும் ரூ. 1.50 லட்சம் காணாமல் போயுள்ளது. இரு தரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.