தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பிரபலமான இயக்குநர் விஷ்ணுவர்தனின் சகோதரர் கிருஷ்ணா, தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், வளர்ந்தபின் ‘அலிபாபா’, ‘கழுகு’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வரவேற்பு பெற்றிருந்தாலும், பெரிய அளவில் வெற்றி அவரை சேரவில்லை.

சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரதீப் என்ற வியாபாரி கூறிய தகவலின் அடிப்படையில், இன்னொரு நடிகராக கிருஷ்ணாவின் பெயரும் வெளியானது. அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட போதும், அவர் ஆஜராகவில்லை. பின்னர் தலைமறைவாக இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து போலீசார் தேடுதல் நடத்தி, அவரை கைது செய்தனர்.
விசாரணையின் போது கிருஷ்ணா, தானுக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்றும், இதய துடிப்பு வேகமாக இருப்பதால் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் தெரிவித்தார். பிரதீப்பும் தன்னைப் பற்றி தவறாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், அவர் உண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என்பதை உறுதி செய்ய, காவல்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.