புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நடிகர் பார்த்திபன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, புதுச்சேரியில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கான கட்டணத்தை குறைத்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும் புதுச்சேரி அரசு தயாரித்தால் புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி குறித்து திரைப்படம் இயக்க தயார் என்றும் முதல்வரிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நான் தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறேன். புதுச்சேரியில் சுற்றுலாத்துறை வளர்ந்து வரும் நிலையில், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. கரோனா காலகட்டத்தால் அதிகரிக்கப்பட்ட படப்பிடிப்பு கட்டணம் ரூ. 28 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமும் குறைத்துள்ளனர், சீரியல்களுக்கு ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமும் குறைத்துள்ளனர்.
தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். ஒரு நல்ல படத்தை மோசமான விமர்சனங்களால் தோல்வியடைய வைப்பது சரியல்ல. நடிகர் தனுஷும் நயன்தாராவும் மோதுவதை பார்வையாளனாக பார்த்து ரசிக்கிறேன். நான் ஒரு பார்வையாளன். அவர்களின் தனிப்பட்ட விருப்பம். பெண்களுக்கு முன்பை விட அதிக பாதுகாப்பு உள்ளது. தமிழ், மலையாள நடிகைகளுக்கு பாதுகாப்பு உள்ளது. தமிழ் திரையுலக கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு இசையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர் நல்லவர் என்று மனைவி கொடுத்த சான்றிதழைத் தவிர வேறு யாரும் அவருக்குச் சான்றிதழ் கொடுக்க முடியாது. குடும்பம் என்றால் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அது மிகைப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. தமிழகத்தில் பேச்சு மூலம் அரசியலை வென்று வருகின்றனர். தற்போது நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு உள்ளது. வெளிநாடுகளில் அரசியல் பேச்சுக்கள் அரிது.
ஆனால், தமிழக அரசியலில் சுவாரசியமான பேச்சு மூலம் ஆட்சிக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய், நடிகர் சீமான் இருவரின் பேச்சும் வெவ்வேறு வகையில் பாராட்டுக்குரியது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவை விஜய் விமர்சிப்பது தவறில்லை. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் ஆளுங்கட்சிக்கு எதிராக அரசியல் நடத்தினார். ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு. யாரையும் சார்ந்திருக்க மாட்டேன். எனக்கும் அரசியல் கட்சி தொடங்க வேண்டும், அதனால் எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன்,” என்றார்.