சென்னை: செம ஸ்பீடில் கூலி படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் முடித்துள்ளார்.
வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. வழக்கம் போல் அனிருத் ரஜினியின் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜூனா, உப்பேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் சுருதிஹாசன் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு சமீபத்தில்தான் வெளியானது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் டிஜிட்டல் விற்பனையும் அமோகமாக நடந்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த படத்தை 120 கோடிக்கு வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரஜினியின் முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதற்கு முக்கியமான ஒரு காரணம் லோகேஷ். ஏற்கனவே லோகேஷின் இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே வசூலில் பெரிய அளவில் சாதனை படைத்த படங்கள். விக்ரம் படத்திற்கு பிறகு தான் கமலின் காட்டில் மழை என்றே சொல்லலாம். அதனால் ரஜினியும் விக்ரம் மாதிரி ஒரு மாஸ் படத்தை தானும் கொடுக்க வேண்டும் என லோகேஷுடன் இணைந்தார். படத்தின் டீஸர் , போஸ்டர் எல்லாம் வெளியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் ஒரு வீடியோவை போட்டு தெரிவித்திருக்கிறார்கள். அதில் ரஜினியை லோகேஷ் இயக்கும் காட்சியில் இருந்து தொடங்கி கடைசி கட்ட படப்பிடிப்பு வரை சின்ன சின்ன பிட்டாக ஒரு வீடியோவாகவே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.