கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பிரச்சாரத்துக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலில் சிக்கி சுவாசம் முட்டி மயக்கம் அடைந்தனர். இதன் விளைவாக 17 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட மொத்தம் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மரக்கிளைகள் உடைந்து விழுந்ததும் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிகழ்ச்சியில் ஏற்பட்ட தாமதமும், கூட்டக் கட்டுப்பாட்டின் குறைபாடுகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மதியம் முதலே ரசிகர்கள், தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். பிரச்சார வாகனம் மிகுந்த நெரிசலில் மெதுவாக நகர, மாலை நேரத்தில் மட்டுமே விஜய் மேடையேறினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது பலர் திணறி விழுந்து பரிதாபமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதும் தண்ணீர் கொடுத்து உதவிய முயற்சிகள் போதவில்லை. பிரச்சாரம் முடிந்த பின் தான் பலரை மீட்க முடிந்தது.
இந்த அசம்பாவிதம் குறித்து நடிகர் சத்யராஜ் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். வெளியிட்ட வீடியோவில், “தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது அல்ல. தவறு செய்தவன் திருந்த வேண்டும், தப்பு செய்தவன் வருந்த வேண்டும். தெரிந்து தெரியாமல் நடந்தால், அதைத் திருத்திக் கொள்ள வேண்டும்” என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார். முடிவில் “ச்சா” என அதிர்ச்சி, கோபம் கலந்து வருத்தமடைந்தார். அவரது இந்தக் கருத்துக்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த பேரழிவைத் தவிர்க்க முடிந்திருக்குமே என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியபடி, இனி இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் அரசு, அரசியல் கட்சிகள், மற்றும் சமூக பொறுப்பாளர்கள் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.