சென்னை: மகாராஜா படத்தை தவறவிட தனது அப்பா பாக்யராஜ் தான் காரணமா என்பது குறித்து நடிகர் சாந்தனு தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியை நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது. உலகம் முழுவதிலும் நெட்பிளிக்ஸ்சில் சுமார் 18.6 மில்லியன் பேர் மகாராஜா படத்தைப் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஜா படத்தில் நடிக்க முதலில் சாந்தனுவை அணுகியதாக அப்பட இயக்குநர் நித்திலன் தெரிவித்திருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. மகாராஜா படத்தை சாந்தனு தவறவிட பாக்யராஜ் தான் காரணம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “மகாராஜா போல் ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. என்னை முதலில் இந்த கதைக்கு தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. மேலும், இந்த படத்தை நான் மிஸ் செய்ததிற்கு என் அப்பாவோ இல்லை நானோ காரணம் இல்லை. அப்பாவிற்கு இயக்குநர் என்னிடம் வந்து கதை சொன்னது தெரியாது. அந்த சமயத்தில் தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது” என்று தெரிவித்துள்ளார்.