அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகர் சிபிராஜ் பேட்டியளித்துள்ளார். சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘டென் ஹவர்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. அதை விளம்பரப்படுத்த சிபிராஜ் பேட்டிகள் கொடுத்து வருகிறார். இதில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்தும் பேசினார்.
அந்த பேட்டியில் சிபிராஜ், “நான் விஜய்யின் தீவிர ரசிகன். ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இருந்து நான் அவருடைய ரசிகன். இதை பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். அவர் கட்சியில் சேரப்போவதாக சில வதந்திகள் வரலாம். ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு அரசியலில் ஆர்வமும் இல்லை,அறிவும் இல்லை. ஒருவர் அரசியலுக்கு வர வேண்டுமென்றால், அவர் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வர வேண்டும்.

அதற்கு மிகப்பெரிய உதாரணம் விஜய் சார். அந்தத் தியாகத்துக்குத் தயாராக இருந்தால்தான் அரசியலுக்கு வர வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் எனது கவனம் சினிமாவில் மட்டுமே உள்ளது. இப்போது ‘டென் ஹவர்ஸ்’ படம் எனக்கு மறுபிரவேசப் படமாக இருக்கும். அதனால், அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை,” என்றார் சிபிராஜ்.