சென்னை : நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் வசூல் முந்தைய படங்களின் வசூலை மிஞ்சவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல், ரெட்ரோ திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (மே 1, 2025) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொழில் துறை வட்டாரங்களின் தகவல்படி, ரெட்ரோ திரைப்படம் தனது முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் ரூ19.33 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த வசூல், சூர்யாவின் முந்தைய பிரம்மாண்ட படமான “கங்குவா”வின் முதல் நாள் வசூலான ரூ28 கோடியை விடக் குறைவு தான்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பிரசாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவைப் பொறுத்தவரை முதல் நாள் வசூல் சற்று குறைவாக இருந்தாலும், பூஜா ஹெக்டேவுக்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாக இந்த படம் அமைந்துள்ளது.
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. படத்தின் வலுவான தொடக்கத்தைக் கருத்தில் கொண்டு, வார இறுதி நாட்களில் இன்னும் அதிக வசூலை எட்ட முடியும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.