பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனியுரிமை மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பல்வேறு நிறுவனங்கள் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி விளம்பர நோக்கில் பயன்படுத்துவதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் அவற்றை ‘மார்பிங்’ செய்து வணிக ரீதியில் வெளியிடுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி தேஜாஸ் கரியா உத்தரவிடுகையில், “தனி நபரின் புகைப்படங்கள் அல்லது பெயரை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்துவது தனியுரிமையை மீறும் செயல். தனியுரிமை அடிப்படையில், ஒருவர் தமது புகைப்படம், பெயரை பயன்படுத்த அனுமதி தரவோ, மறுக்கவோ உரிமை பெற்றவர். இது வணிக ரீதியிலும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார். அதன்படி, ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனும் தனி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த உத்தரவு பாலிவுட் உலகம் மட்டுமல்லாது, விளம்பர மற்றும் டிஜிட்டல் துறையிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் பிரபலங்களின் படங்களை மாற்றியமைத்து தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தீர்ப்பு, பிரபலங்களின் தனியுரிமையை காக்கும் வகையில் முக்கிய முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.