சென்னை: மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து 233 பக்க விரிவான அறிக்கையை நீதிபதி ஹேமா தலைமையிலான குழு வெளியிட்டது.
சினிமா வாய்ப்பு பெறுவது தொடர்பாக பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, குடித்துவிட்டு சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து துன்புறுத்துவது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இந்த அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும், 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து நடிகை பானுப்ரியாவின் தங்கையும் முன்னாள் கதாநாயகியுமான நடிகை நிஷாந்தி என்கிற சாந்திப்ரியா கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், ‘மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்திருக்கக் கூடாது.
அவர் ராஜினாமா செய்ததில் எந்த பயனும் இல்லை. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். எங்களை நம்புங்கள். தயவு செய்து உங்கள் குரலை உயர்த்தி எங்களுடன் பேச வாருங்கள்’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் இருந்திருக்க வேண்டும்.
இதுவே சரியான அணுகுமுறை. சினிமா துறையில் ஆண்கள் கூட துன்புறுத்தப்படுகிறார்கள். பாலியல் துன்புறுத்தல் என்பது மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி அனைத்துத் திரையுலகிலும் உள்ளது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு, தெலுங்கு திரையுலகில் இருந்தும் யாராவது ஒருவர் முன் வந்து இதுபோன்ற பிரச்னைகளைச் சொல்லலாம்.’