சென்னை: விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி மீண்டும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ஜெனிலியாவின் தோழியாக நடிகை ராஷ்மி நடித்துள்ளார். இப்படத்தில் இவரது காட்சிகள் சமீபத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து ராஷ்மி இன்ஸ்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த ரீல்களை நான் பதிவிடக் காரணம், கடந்த இரண்டு நாட்களாகவே பலருக்கு என் ஞாபகம் வருகிறது.
அதே நேரத்தில் நடிகர் விஜய், நடிகைகள் ஜெனிலியா, பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் ஜான் இயக்கத்தில் சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆனதை கொண்டாடுகிறோம். உங்களில் பலர் திரையரங்கில் சென்று மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்து எனக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து வருகிறீர்கள். அந்தப் படத்தில் சிறு வேடத்தில் நடித்த என்னைக் கண்டுபிடித்துப் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைப் போன்றவர்கள் வெளிவர உங்கள் பாராட்டு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. அதற்காக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சச்சின் படத்தில் நான் நடித்த ஸ்மிருதி கேரக்டரை எழுதிய விதம் என்னை உங்கள் அனைவரிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது என்று நம்புகிறேன். உண்மையான நட்பு, நட்புக்காக எப்போதும் துணை நிற்பது, சரியானதைத் தேர்வு செய்ய உதவுவது ஆகியவற்றுக்கு இடையேயான எளிமை ஆகியவை படத்தில் எழுதப்பட்டுள்ளன. அந்த பாத்திரத்தில் நடித்ததில் பெருமைப்படுகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், அந்தப் படத்தில் வரும் ஸ்மிருதி கதாபாத்திரத்தைப் போலவே, நிஜ வாழ்க்கையிலும் என் நண்பர்களுடன் இருக்கிறேன். நீங்களும் உங்கள் நண்பர்களுடன் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அப்போது எனக்கு 20 வயது. நான் மிகவும் இளம் பெண்ணாக இருந்தேன். நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அந்த பழைய நினைவுகளை நினைவு கூர்வதில் மகிழ்ச்சி. உங்கள் விருப்பங்களை அலை போல் பெறுகிறேன். அதற்காக அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக சச்சின் படத்தில் நான் வரும் இடங்களை மட்டும் எடுத்து ரீல் செய்து வைரலாக்கிய பிரசாந்த். எனது நண்பர்கள் பலர் அதை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். நான் அதை மனதார பாராட்டுகிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி” என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.