சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களுக்கு நிறைய சுவாரஸ்ய தருணங்களை தந்தது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கியும் நடித்தும் உருவான இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை நாளை முன்னிட்டு வெளியாக உள்ளது.
விழாவில் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு தனுஷைப் பற்றி பாராட்டுகளையும், சுவாரஸ்ய அனுபவங்களையும் பகிர்ந்தனர். அதில் பார்த்திபனின் பேச்சு சிறப்பாக கவனம் ஈர்த்தது. நிகழ்ச்சியில் கேள்வி-பதில் நேரத்தில், “தனுஷ் சேரவேண்டியதும், சேரக்கூடாததும் என்ன?” என்ற கேள்விக்கு பார்த்திபன், “அவருக்கு சேரவேண்டியது அவரது இரு மகன்கள். சேரக்கூடாதது நடிகைகள். ஏனென்றால், தனுஷ் பாவம் அப்பாவி. ஆனால் நடிகைகள் அவருடன் போட்டோ எடுக்கும்போது, தேவையற்ற கிசுகிசுக்கள் எழுந்துவிடுகின்றன. அதனால், நடிகைகள் கிசுகிசுக்காக தனுஷிடம் சேராமல் இருக்க வேண்டும்” என்று சிரிப்புடன் கூறினார்.

மேலும் அவர், “தனுஷ் இவ்வளவு வேகமாக படம் எடுக்கக் கூடாது. சில இயக்குநர்கள் ஒரு காட்சி எடுக்கவே பல வருடங்கள் எடுப்பார்கள். ஆனால் தனுஷ் தேவையானதை மட்டும் எடுத்து, எடிட்டரின் வேலையையே குறைத்து விடுகிறார். அவரின் வேகம் மற்ற இயக்குநர்களுக்கு தயாரிப்பு தரப்பில் அழுத்தத்தை உண்டாக்கும்” என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இந்த பேச்சு அங்கு இருந்த ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், பார்த்திபன் மற்றும் சத்யராஜ் இருவரும் தனுஷை “சகலகலா வல்லவன்” என்று பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் நடந்த உரையாடல்கள், குறிப்பாக பார்த்திபனின் கூற்றுகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.