தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித், “எனக்கு பட்டங்களில் நம்பிக்கை இல்லை. என் பெயருக்கு முன்னால் பட்டங்களை வைத்திருப்பதை விட அஜித் அல்லது ஏகே என்று அழைக்கப்படுவதையே நான் விரும்புகிறேன். இது ஒரு தொழில். நான் ஒரு நடிகன். எனது வேலையைச் செய்ய எனக்கு சம்பளம் கிடைக்கிறது. புகழும் அதிர்ஷ்டமும் எங்கள் உழைப்பால் வருகிறது.
நான் என் வேலையை விரும்புகிறேன். 33 வருடங்களாக செய்து வருகிறேன். என்னால் முடிந்தவரை என் வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கிறேன். நான் அதிகம் யோசிப்பதை தவிர்க்கிறேன். ஒரே நேரத்தில் அதிக படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. எனது மற்ற பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களில் கவனம் செலுத்துகிறேன். உண்மையைச் சொல்வதானால், எனக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

மனதளவில் நான் இன்னும் நடுத்தர வர்க்கத்தினரே. இங்கே இருப்பது, இந்த உணர்வுகளை எல்லாம் அனுபவிப்பது எனக்கு ஒரு கனவு உலகம் போன்றது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உணர்கிறேன். எனது குடும்பத்தினரின் ஆதரவுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என் மனைவி ஷாலினி நிறைய தியாகம் செய்துள்ளார். அவள் மக்களால் மிகவும் பிரபலமாகவும் விரும்பப்பட்டவளாகவும் இருந்தாள். அவள் என் தூண். இந்த பிரபஞ்சத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நான் எடுத்த முடிவுகள் தவறாக இருந்த நேரங்கள் உண்டு. அந்த சமயங்களில், அவள் என்னுடன் நின்றாள், என்னை ஒருபோதும் பின்வாங்கவில்லை, எனக்கு ஆதரவாக இருந்தாள். என் வாழ்க்கையில் நான் சாதித்த எல்லாவற்றின் பெருமையும் அவளையே சாரும்” என்றார் அஜித். பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடந்தது.
இந்த விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி கவுரவித்தார். விழாவில் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஜித்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.