சென்னை: பெல்ஜியத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்பா பிரான்கார்சாம்ப்ஸ் சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘குட் பேட் அக்லி’ பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வருகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். முன்னதாக துபாயில் நடைபெற்ற ‘24எச் சீரிஸ்’ கார் பந்தயத்தில் அஜித் தலைமையிலான ‘அஜித்குமார் ரேசிங் டீம்’ கலந்து கொண்டு 2-வது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், பெல்ஜியத்தில் உள்ள பிரபல ஸ்பா பிரான்கார்சாம்ப்ஸ் சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், அஜித் மேடையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு நின்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.