சென்னை: நடிகை அபர்ணதி சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா துறையில் தன்னுக்கான கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். நெருங்கிய தோழி ஒருவரால் பட வாய்ப்பு பறிக்கப்பட்டது, ஆர்யாவுடன் நடந்த “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள், ‘ஜெயில்’ படத்தில் இன்டிமேட் காட்சிகளின் அனுபவம், மற்றும் சினிமா துறையின் சொல்லப்படாத விதிகள் குறித்து அவர் திறம்பட பேசியுள்ளார்.

அபர்ணதி, 2018 ஆம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்ததாகவும், கடந்த 6-7 ஆண்டுகளில் பல சவால்களை சந்தித்ததாகவும் கூறினார். தோழி ஒருவரின் துரோகத்தைப் பற்றி பேசும்போது, “அவள் நடித்த படத்தின் பிரீமியருக்கு நான் சென்றிருந்தேன். மறுநாளே அந்த இயக்குநரிடம் என்னைப் பற்றி கேட்கப்பட்டபோது, என்னை தவிர வேறு நடிகையை பரிந்துரைத்தாள். அந்த நம்பிக்கை துரோகம் என்னை மிகவும் பாதித்தது” என்றார்.
ஆர்யாவுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுபவம் குறித்து, “அவர் திருமணம் செய்வார் என்ற எண்ணமே என்னை அந்த நிகழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ஆனால் நிறைய வாக்குவாதங்கள் நடந்ததால் எனக்கு மன வருத்தம் ஏற்பட்டது. மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க மாட்டேன்” எனத் திடமாகக் கூறினார். ‘ஜெயில்’ படத்தின் இன்டிமேட் காட்சிகள் குறித்து, “இரண்டாம் நாள் படப்பிடிப்பு என்பதால் கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் அது ஜாலியாகவே முடிந்தது” என்றும் தெரிவித்தார்.
சினிமா துறையில் சொல்லப்படாத விதிகள் பற்றி கேட்கப்பட்டபோது, “ஒப்பந்தம் போடுவார்கள், ஆனால் அதில் குறிப்பிட்ட சம்பளம் தரமாட்டார்கள். அந்த ஒப்பந்தமே வீணாகி விடுகிறது” என அவர் வெளிப்படையாக கூறினார். அதேசமயம், casting couch தொடர்பாக எந்த தவறான அனுபவமும் இல்லையெனவும், உடல் எடை மாற்றம் போன்ற காரணங்களுக்காகவே கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.