தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், இந்திய இசை உலகின் செம்பவளமாகவும் திகழ்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். கடந்த 32 ஆண்டுகளாக இசையமைப்பாளராக உலகளவில் புகழ் பெற்று வருகிறார். வெறும் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை தன் இசையால் அடிச்சுப் பதித்துள்ள இவர், ரசிகர்களின் மனதில் ஒரு நீங்கா முத்திரையை பதித்து இருக்கிறார்.

1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணமான ரஹ்மானுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவ்விழாக்கள் மற்றும் பாராட்டுகளின் மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு எதிர்பாராத திருப்பம் நேர்ந்தது. அவரது மனைவி சாய்ரா பானு, ரஹ்மானை விவாகரத்து செய்த உள்ளதாக அறிவித்தார். இந்த தகவல் திரையுலகை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விவாகரத்துப் பேச்சுகளுக்கிடையே ரஹ்மான் மீது சில அவதூறுகளும் சமூக வலைதளங்களில் பரவின.
இதனால் மனஅழுத்தத்தில் இருந்த ரஹ்மான் சில மாதங்கள் சினிமாவிலிருந்து ஓர் இடைவேளை எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படம் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை கிளப்பி, டிரெய்லரும் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘தக் லைஃப்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஹ்மான், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுடன் மனம் திறந்துப் பேசினார். அவரிடம், “உங்களிடம் இருந்து பலர் இசையமைப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். அது உங்களுக்கு சந்தோஷமா, இல்லை பொறாமையா?” என ஒரு கேள்வி எழுந்தது.
அதற்குப் பதிலளித்த ரஹ்மான், “அது எனக்கு மிகுந்த சந்தோஷமே. நான் வளர்ந்த வழியிலேயே பலரும் வந்திருக்கிறார்கள் என்ற உணர்வுதான். இசை என்பது எல்லோருக்கும் திறக்கப்படும் வாயிலாக இருக்க வேண்டும். நிறைய பேர் இருக்கும்போது, எனக்கு கொஞ்சம் மட்டும் வேலை வரும். அதனால் தரத்தில் அதிக கவனம் செலுத்த முடியும். ஆனால் எல்லோரும் என்னிடம் வந்தால், நான் அனைத்தையும் செய்ய முடியாது. நான் ‘வேண்டாம்’ என்று சொன்னால் சிலர் கோபப்படுகிறார்கள்” என்று சிரித்துக்கொண்டு பதிலளித்தார்.
இசை உலகின் பேரமைதியான ரஹ்மான், நேர்மையான பதில்களாலும், பணிவான செயல்களாலும் எப்போதும் ரசிகர்களிடம் நல்ல இடம் பிடித்து வருகிறார். ‘தக் லைஃப்’ படம் அவரது இசை வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களை தாண்டி மீண்டும் முழுமையாக கலை வாழ்க்கையில் இறங்கியிருக்கும் ரஹ்மானுக்கு ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்த புதிய முயற்சி அவரது கலை வாழ்க்கையில் மீண்டும் ஒளிக்கதிராக பிரகாசிக்கவிருக்கிறது.