இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்திய பாரம்பரிய இசையில் சாதனை படைத்தவர்களைக் கவுரவிக்கும் வகையில் தனது ‘கேஎம் மியூசிக் கன்சர்வட்டரி’யுடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ’ விருதுகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த திங்கட்கிழமை தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களை போற்றும் வகையில் இந்த விருதுகளை வழங்க உள்ளதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இளம் இசைக்கலைஞர்களுக்கான விருதுகள், கல்வியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, பாரம்பரிய இசையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முன்னோடிகளுக்கான விருது என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.
இதற்கான வழிகாட்டி குழுவில் இசைக்கலைஞர்களான ஆஷா போஸ்லே, அம்ஜத் அலி கான், பாம்பே ஜெய, அஜய் சக்ரவர்த்தி மற்றும் ஆலோசனை குழுவில் இலா பாலிவால், சாய் ஷ்ரவணம், பரத் பாலா, பாத்திமா ரபிக், கதீஜா ரஹ்மான், ஆடம் மற்றும் கிளின்ட் ஆகியோர் உள்ளனர். விருது பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சர்வதேச அளவில் ஏ.ஆர். ரஹ்மான் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றன.