சென்னை: தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏஆர்ஆர் இம்மர்சிவ் என்டர்டெயின்மென்ட் குழுமம் செயல்பட்டு வருவதாகவும், தமிழ் இலக்கியங்களை சித்திரங்களாகவும், பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்க உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார். இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் தனது X பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘தமிழ்’ என்பது உலகின் மிகப் பழமையான மொழி, அது இன்னும் வளர்ச்சியடைந்து வளர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள் ஆய்வு மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், திருத்தங்கள் செய்து வளப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளன. புதுமைக்கு குறைவில்லாத நம் தமிழ் மொழியின் வளர்ச்சி, அர்த்தமுள்ள தொடர்பாடல் மூலம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நமது பொறுப்பை சுட்டிக் காட்டுகிறது.

இதனடிப்படையில் ஏஆர்ஆர் இம்மர்சிவ் என்டர்டெயின்மென்ட் தமிழ் மொழிக்கு ஒரு பெருமை சின்னத்தை உருவாக்கி, தமிழ் இலக்கியங்களை சித்திரங்களாகவும், பல்வேறு புதிய வடிவங்களில் வழங்கவும் செயல்பட்டு வருகிறது. ஏஆர்ஆர் இம்மர்சிவ் என்டர்டெயின்மென்ட் இந்த தமிழின் பெருமை சின்னத்தின் டிஜிட்டல் ரெண்டரிங்கை உருவாக்கும்.
எதிர்காலத்தில் இந்தப் பெருமைச் சின்னத்திற்காக ஒரு கட்டிடமும் வரலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களை வெளியிடுவோம். இந்த முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழை ரசிப்போம்” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.