சென்னை: நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி 2009-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமான 15 வருடங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி திருமண வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். மேலும், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது மனைவிக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், 2009-ல் பதிவு செய்யப்பட்ட திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை 3-வது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜரானபோது, இருவரையும் சமரச அமர்வு நடத்த உத்தரவிட்டார். மூன்று சுற்று சமரச பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் தங்கள் வழக்கறிஞர்களுடன் தனித்தனியாக ஆஜரானார்கள். வழக்கு விசாரணையில், நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோருவதற்கான காரணம் குறித்து பதில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது கணவர் ரவி மோகனிடம் ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் ரவி மோகன் தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவுக்கு ஜூன் 12-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ரவி மோகனுக்கு உத்தரவிட்டுள்ளது.