தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் நடிக்கவில்லை என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார். தனுஷ், நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இட்லி கடை’.
தனுஷ் இயக்கி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்தில் தனுஷின் தம்பியாக அசோக் செல்வன் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ‘இட்லி கடை‘ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அசோக் செல்வன் நடிப்பார் என பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அசோக் செல்வன். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தனுஷ் சார் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருடைய ரசிகன். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். ‘இட்லி கடை‘ படத்தில் நான் நடிக்கவில்லை என அசோக் செல்வன் ட்வீட் செய்துள்ளார்.
‘இட்லி கடை‘ படத்தின் தேனி படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் சென்னையில் அரங்குகளை அமைத்து சில காட்சிகளை படமாக்கவுள்ளனர். அதன் பிறகு துபாயிலும் சில முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர்.