
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திலும் தன் கதைத்தேர்வால் மெருகேற்றி வருகிறார் நடிகர் அசோக் செல்வன். வளர்ந்து வரும் இளம் நடிகரானாலும், தனது செயல்பாடுகள் மற்றும் பாராட்டுக்குரிய நடிப்பால் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். சில விமர்சனங்களையும் எதிர்கொண்டவர் என்றாலும், தனது பயணத்தை உறுதியாக தொடர்ந்துகொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃஃப்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் அசோக். இப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இருந்த அவர், நமது குழுவிற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அது உண்மையில் ஒரு சுர்பிரைஸ் பேட்டியாகவே அமைந்தது.
அசோக் செல்வன் ஒரு தீவிரமான கமல் ரசிகர் என்பதை அவர் இவ்வருடம் நடைபெற்ற ‘தக் லைஃஃப்’ இசை வெளியீட்டு விழாவிலும் கூறினார். கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியீடானபோது ஏற்பட்ட பிரச்சினைகளில், அவருக்கு ஆதரவு தெரிவித்து வீட்டு வாசலிலே நின்றவர்களில் ஒருவராக இருந்துள்ளார் அசோக். இன்று அந்த வரத்தின் படத்தில் நடித்திருப்பது அவருக்கு மிகவும் பெருமைமிக்க தருணம்.
அசோக் கூறும்போது, “நான் சிறுவயதில் இருந்தே வெறித்தனமான கமல் ரசிகன். விருமாண்டி படத்தை நான் என் மாமாவுடன் கமலா தியேட்டரில் பார்த்தேன். இப்போது அந்த படம் 22 ஆண்டுகளை கடந்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் இன்றும் அந்தப் படத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.
அதையடுத்து, “தெனாலி போன்ற படங்களை நாம் முதலில் பார்த்தால் காமெடி படம்தான் என தோன்றும். ஆனால் உண்மையில் அது உணர்வுகளோடு கலந்த ஒரு கதை. நான் அந்தப் படத்தை என் அம்மாவுடன் சிறுவயதில் பார்த்தேன். பார்த்தபோது சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தேன். என் சிரிப்பால் முன்னால் இருந்தவர்கள் எழுந்து என் அம்மாவிடம் ‘புள்ள வளர்த்து வச்சீங்க’ என்று திட்டினார்கள்” என சிரித்தபடியே பகிர்ந்தார்.
இவ்வாறு தன் கனவுக்குரிய நடிகருடன் திரையில் பகிர்ந்த அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்த அசோக் செல்வனுக்கு, ‘தக் லைஃஃப்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வாழ்த்துக்கள் தெரிவித்து நமது குழுவினர் பேட்டியை இனிமையுடன் முடித்தனர்.