சென்னை; ராஜமௌலியின் பாகுபலி: தி எபிக் திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரசிகர்கள் இந்த படத்திற்கு உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர்.
தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் பாகுபலி முதல்பாகம் 2015 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டிலும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடுப் போட்டது. இரண்டு பாகங்களும் சேர்த்து உலகளவில் ரூ. 2400 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்தன.
இந்த நிலையில், இரண்டு படங்களையும் இணைத்து பாகுபலி: தி எபிக் என்ற பெயரில் படம் வெளியிடப்படும் என இயக்குநர் ராஜமௌலி தெரிவித்திருந்தார். அதன்படி, 3 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் இன்று (அக்.31) உலகளவில் திரையரங்குகளில் வெளியானது.
உலகளவில் மொத்தமாக 1,150-க்கும் அதிகமான திரைகளில் இந்தப் படம் வெளியானது. அமெரிக்காவில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் 210 திரையரங்குகளிலும் வெளியானது.
அதேபோன்று, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் 144 திரையரங்குகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியானது.
இந்த நிலையில், இந்தப் படம் முதல்நாள் டிக்கெட் மட்டும் சுமார் ரூ. 10 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விஜய்யின் கில்லி திரைப்படம் மறுவெளியீட்டின் முதல்நாளில் ரூ. 7.9 கோடி முதல் ரூ.10 கோடி வரையும், பவன் கல்யாணின் ‘கபர் சிங்’, மகேஷ் பாபுவின் கலேஜா உள்ளிட்டவையும் முதல்நாளில் ரூ. 10 கோடிக்கு உள்ளாகவே வசூலீட்டியிருந்தன.
ஆனால், பாகுபலி முதல் நாளிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும், இந்தப் படம் மறுவெளியீட்டிலும், ரூ. 100 கோடி வரை வசூலீட்டும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.