தெலுங்கு சினிமாவின் சிங்கம் என்று அழைக்கப்படும் நந்தமூரி பாலகிருஷ்ணா, தனது திரை வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அவருக்கு World Book of Records விருது வழங்கப்பட்டது. இந்த பெருமையை கொண்டாட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை வீடியோ மூலம் தெரிவித்தார். அதில் ரஜினி, “லவ் யூ பாலய்யா” என்று கூறியதும், பாலகிருஷ்ணா உணர்ச்சி வசப்பட்டார்.

பாலகிருஷ்ணா, புகழ்பெற்ற என்.டி.ஆரின் ஆறாவது மகன். 1974ஆம் ஆண்டு தனது தந்தையுடன் குழந்தை நடிகராக திரையுலகில் அறிமுகமான அவர், 1984இல் “சாகசமே ஜீவிதம்” மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 50 ஆண்டுகளில் அவர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பல சூப்பர்ஹிட் படங்கள் அவரை தெலுங்கு ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்த நாயகனாக வைத்திருக்கின்றன.
அவரது படங்களில் 13 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்ததுடன், ஒரே ஒரு படத்தில் மூன்று வேடங்களையும் நடித்துள்ளார். மாஸ், கமர்ஷியல் என அவரது படங்கள் தனித்துவம் பெற்றவை. மற்ற நடிகர்கள் பின்பற்றிய கமர்ஷியல் ஸ்டைல் கூட, பாலய்யாவின் தனித்துவத்துக்கு சமமாக இருக்கவில்லை. இதனால் தான் அவர் தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த முதல் நடிகர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்தச் சாதனைக்காக நடந்த விழாவில், ரஜினியின் வீடியோ வாழ்த்து நிகழ்ச்சியின் சிறப்பை கூட்டியது. “பாலய்யா என்றால் பாசிடிவிட்டி, எனர்ஜி, அன்பு” என்று கூறிய ரஜினியின் வார்த்தைகள் ரசிகர்களை கவர்ந்தன. தமிழிலும் பல முன்னணி நடிகர்கள் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும், தெலுங்கு திரையுலகில் பாலகிருஷ்ணா சாதித்தது வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.