புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கடந்த 12-ம் தேதி மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சர்வதேச குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதற்கு காரணம். இதையடுத்து, பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல லாரன்ஸ் கும்பல் திட்டமிட்டுள்ளது என்ற விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.
இதற்கு காரணம் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் சிங்காரா வேட்டையில் ஈடுபட்டதுதான் என தெரியவந்துள்ளது. ஜோத்பூரில் உள்ள பிஷ்னோய் சமூகத்தினரின் சொந்த குரு ஜம்பேஷ்வர் கோவிலுக்கு சல்மான் வந்து மன்னிப்பு கேட்டால், அவரை விடுவிப்பேன் என்றும் லாரன்ஸ் கூறியிருந்தார்.
சல்மானின் தந்தை சலீம் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில், “என் மகன் மான் உட்பட எந்த வேட்டையிலும் ஈடுபட்டதில்லை. இதுநாள் வரை எங்கள் குடும்பம் கரப்பான் பூச்சியைக் கூட கொன்றதில்லை. சல்மான் ஒரு விலங்கு பிரியர், அவற்றைக் கொல்ல முயன்றதில்லை. எனவே எனது மகன் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை.
பிஷ்னோய் சமூகத்தின் தேசிய தலைவர் தேவேந்திர பிஷ்னோய் கூறியதாவது:- மான் வேட்டையாடிய வழக்கில் சாட்சிகளும், போலீசாரும் பொய்யர்களா? ஆதாரங்களின் அடிப்படையில் சல்மான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. சல்மான் கான் குடும்பம் பொய்யர்கள்.
வேட்டையாடிய குற்றத்தை சல்மான் செய்துள்ளார். லாரன்ஸ் பணத்திற்காக அவர்களிடம் பேரம் பேசவில்லை. எங்கள் கிராமத்தில் மான்களை வேட்டையாடியதால்தான் லாரன்ஸுடன் சல்மானுக்கு மோதல் ஏற்பட்டது. சல்மான் எங்கள் கோவிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
மன்னிப்பு கேட்பது யாரையும் காயப்படுத்தாது. இவ்வாறு தேவேந்திர பிஷ்னோய் கூறியுள்ளார். இதற்கிடையில், சர்வதேச குற்றவாளியான லாரன்ஸ் தனது சொந்த விளம்பரத்திற்காக சல்மானை குறிவைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜோத்பூரின் பிஷ்னோய் சமூகத்தின் ஒரு பகுதியினர் லாரன்ஸை ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.