சென்னை: பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள “பைசன்” திரைப்படம் இன்று ரசிகர்களிடம் விறுவிறுப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம், இந்திய அளவில் புகழ்பெற்ற கபடி வீரர் கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். தனது கதாபாத்திரத்திற்காக துருவ் விக்ரம் ஒரு வருடம் முழுவதும் கபடி பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. அவரின் தீவிரம் திரையில் முழுமையாக வெளிப்பட்டிருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
படம் வெளியானதுடன் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்கள் பேரார்வத்துடன் திரையரங்கை நிரப்பினர். அங்கு பா. ரஞ்சித்தும், இயக்குநர் மாரி செல்வராஜும் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர். படத்தின் வெற்றியை கொண்டாடிய அவர்கள், சந்தோஷத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் அளித்த பெரும் வரவேற்பால், நடிகை அனுபமா பரமேஸ்வரனும் கண்களில் நீர் வந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருவ் விக்ரமின் தந்தை சியான் விக்ரமும் ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்து பெருமைப்படைந்தார். “பைசன்” ரசிகர்களிடையே பெரும் வெற்றிக் குரல் எழுப்பி, துருவ் விக்ரத்தின் கேரியரில் முக்கியமான படமாக மாறியுள்ளது.