சென்னை: வெங்கட் பிரபுவின் ‘தி கோட்’ படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய் முழுநேர அரசியலில் இணையவுள்ள நிலையில் இந்த 69-வது படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்துள்ளார்.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.
நடிகர் பாபி தியோலை பொறுத்த வரை, பாலிவுட்டில் ரொமான்டிக் ஹீரோவாகத் தொடங்கினாலும், சமீபத்தில் சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றார்.
தொடர்ந்து தமிழில் சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து விஜய்க்கு வில்லனாக வருகிறார். மேலும் ‘விஜய் 69’ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.