சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்-ன் பிளாக்மெயில் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் சமீப காலமாக நடிகராகவும் வலம் வருகிறார். இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது.
இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இதனிடையே பிளாக் மெயில் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.