போபால்: அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் இப்படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றபோது அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமானோர் திரண்டதால் ரேவதி (39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆந்திராவில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
புஷ்பா 2 திரையிடப்பட்ட திரையரங்கில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் ஷபீர் என்ற நபர் ‘புஷ்பா 2’ படத்தைப் பார்க்க திரையரங்குக்குச் சென்றிருந்தார். அப்போது, இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்க கேண்டீனுக்கு சென்றுள்ளார். தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கேண்டீன் உரிமையாளர் பணம் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது, கேன்டீன் உரிமையாளர் ஷபீரின் ஒரு காதைக் கடித்தார். ரத்த வெள்ளத்தில் ஷபீர் அங்கிருந்து ஓடினார். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.