பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’, ‘கேதார்நாத்’, ‘சிச்சோர்’ போன்ற சில படங்களில் நடித்துள்ளார். ஜூன் 14, 2020 அன்று, அவர் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த அதிர்ச்சி மரணம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த தற்கொலைக்கு போதைப்பொருள் தான் காரணம் என்றும் செய்திகள் வெளியாகின. இருப்பினும், சுஷாந்த் சிங்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது தந்தை கேகே சிங், தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்ரவர்த்தி மீது பாட்னாவில் வழக்குப் பதிவு செய்தார். நடிகை ரியாவும் சுஷாந்தின் சகோதரி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை சிபிஐ விசாரித்து வந்தது.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையா என்று சந்தேகிக்க அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை ரியா சக்ரவர்த்திக்கும் இந்த மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.