சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடக்கத்தில் இது துப்பாக்கி படத்தின் தொடர்ச்சியா என்ற கேள்வி எழுந்தாலும், இயக்குநர் நேரடியாக மறுத்துவிட்டார். பிறகு பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அனிருத் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படம் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை வடிவமைப்பில் உருவாகியுள்ளது. வில்லனாக வித்யூத் ஜம்வால் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, குறிப்பாக அவரது டிரைலர் வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ருக்மிணி வசந்த், பிஜு மேனன், ஷாபீர், விக்ராந்த் போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். டிரைலரில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் படம் குறித்து எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது.
சென்சார் போர்டு இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பாக 16 வயதுக்கு மேற்பட்டவர்களே பார்க்க தகுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 47 நிமிடம் 33 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நீண்டநேரம் ஓடும் படங்கள் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறாத சூழலில், மதராசி எந்தளவுக்கு வெற்றியடையும் என்ற ஆர்வம் அதிகமாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் படம் என்றாலே அனைத்து வயதினரும் எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த முறை குழந்தைகள் படம் பார்க்க முடியாத நிலை ரசிகர்களை சற்று வருத்தமடையச் செய்துள்ளது. இருந்தாலும், நடிகரின் மார்க்கெட், அனிருத் இசை, முருகதாஸ் இயக்கம் ஆகியவை இணைந்ததால், மதராசி பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.