ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது தி சே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து அவர் இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ளார். அங்கு அவர் துறவியோடு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், பல விஷயங்களைப் பேசும் போது, வேட்டையன் படத்தைப் பற்றியும் பேசினார். தசரா பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் படம் தற்போது அன்றைய தேதியை தள்ளி வைத்து தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு போட்டியாக சூர்யாவின் கங்குவா படம் ஏற்கனவே அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளதால் வேட்டையன் தீபாவளிக்கு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.