பிரம்மானந்தத்தின் மகன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் நாக் அஸ்வின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தனக்கும் பிரம்மானந்தத்துக்கும் உள்ள நட்பு குறித்து சிரஞ்சீவி பேசினார். மேலும், அவர் தனது உரையில் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். அரசியல் குறித்து பேசிய சிரஞ்சீவி, “வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்து விலகி இருப்பேன்.
அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகள் திரைத்துறையினரின் தேவைக்காக மட்டுமே. அரசியலில் இருந்து ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவேன். நான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் எனது ரசிகர்கள் மற்றும் படங்களுக்கு மட்டுமே நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன். எனது இலக்குகள் அனைத்தையும் பவன் கல்யாண் நிறைவேற்றுவார் என சிரஞ்சீவி கூறியுள்ளார்.
இந்த பேச்சு திரையுலகினர் மட்டுமின்றி ஆந்திர அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது. 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்து சினிமாவை விட்டு ஒதுங்கினார் சிரஞ்சீவி. பின்னர் 2011-ல் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். 2018-ல் சிரஞ்சீவி பல்வேறு பதவிகளை வகித்தார். அதன் பிறகு அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்த பவன் கல்யாண், சொந்தமாக ஜன சேனா கட்சியை தொடங்கி தற்போது ஆந்திராவின் துணை முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.