மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று ஜூன் 5ஆம் தேதி வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படம் வெளியீட்டுக்கு முன்னர் நடந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், கன்னடம் என்பது தமிழிலிருந்து வந்த மொழி என்று கூறியதால், கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனால் படம் அங்குத் திரையிடப்படவில்லை.

படம் மற்ற மாநிலங்களில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே கலந்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், திரைக்கதை மந்தமாக இருந்தது என்றும் கூறுகிறார்கள். ஒருவர் தெரிவித்ததாவது, “பேசும் காட்சிகள் அதிகம், சண்டை காட்சிகள் குறைவு, சிம்பு, கமலின் நடிப்பை தவிர படத்தில் பிடித்தது ஒன்றுமில்லை”. மற்றொருவர், “மணிரத்னம் மீது கோபம் வருகிறது. சிம்புவை இப்படி பயன்படுத்தியது வருத்தம். நாயகன் பாகம் 2 போல தெரிகிறது” என்றார்.
சமூக வலைதளங்களில் படத்திற்கு எதிராக விமர்சனங்கள் மட்டுமன்றி, மீம்கள், கலாட்டா பதிவுகள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. “இந்தியன் 2 படம் இதைவிட சிறந்தது” என்றும், “கர்நாடகா படம் வாங்காமல் தப்பித்தது” என்றும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் மற்றும் சில இயக்குநர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது படக்குழுவுக்கு குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.