சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 12, 2023 அன்று நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர், செப்டம்பர் 10 அன்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் வாங்கிய டிக்கெட்டுகளுடன் மக்கள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிகழ்விற்கான பார்க்கிங் வசதி உட்பட ரூ.10,000-க்கு டிக்கெட் வாங்கிய சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், செப்டம்பர் மாதம் நடந்தபோது சரியான முன் அறிவிப்பு இல்லாததாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திரும்பப் பெறக் கோரி ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமைப்பான ஏசிடிசி, இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.5,000 என மொத்தம் ரூ.55,000 மனுதாரர் அர்ஜுனுக்கு இரண்டு மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டது.