மதுரை: சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சினிமா ஸ்டண்ட் பயிற்சியாளர் கனல் கண்ணன் மதுரை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், “நான் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவன். ‘அறுபடை வீடு நமதே’, ‘மீசையை முறுக்கி இந்துக்கள் கிளம்புவார்கள்’ என்ற பாடலுடன் திருப்பரங்குன்றம் மலை பற்றிய செய்தியுடன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன்.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த பதிவு போடப்பட்டுள்ளதாக மதுரை சைபர் கிரைம் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தவறான நோக்கத்துடன் என் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன், எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியது. இதையடுத்து கனல் கண்ணனை போலீசார் மார்ச் 4-ம் தேதி வரை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.