சென்னை: “தாலி முக்கியம் இல்லை, அதுக்குப் பின்னால் இருக்கும் பெண்ணின் உணர்ச்சி முக்கியம்” என்ற வசனத்தால் பேச்சு பெருக்கெடுத்துள்ள டியூட் திரைப்படம், குடும்ப பார்வையாளர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. தீபாவளி நாளில் குடும்பத்துடன் பார்த்த ரசிகர்கள், இப்படத்தின் கதை மற்றும் கருத்தில் மிகுந்த விரக்தியடைந்து தியேட்டர்களை விட்டு வெளியேறியுள்ளனர். தமிழ்ச் சமூகத்தில் திருமண மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில், இப்படம் அந்த உணர்ச்சியை புறக்கணிக்கிறது என பலர் விமர்சிக்கின்றனர்.

இயக்குனர் கீர்த்தீஸ்வரனின் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள இந்த படத்தை சோஷியல் மீடியாவில் கடுமையாக மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, “மணமகனின் உணர்ச்சியைப் பற்றிச் சொல்லவில்லையே!” என ரசிகர்கள் கமெண்ட்டுகள் வெடிக்கின்றன. சிலர் இதை “தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான படமாக” குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, இங்கிலிஷ்காரன் படத்தில் வடிவேலு மற்றும் சத்யராஜ் நடித்த பிரபலமான “நீ தாலி கட்டு, நான் கூட்டிட்டுப் போறேன்” என்ற காமெடி காட்சியை வைத்து, டியூட் படத்தை ட்ரோல் செய்து மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். அந்தக் காமெடிக்கு இணையாக படத்தின் உரையாடல்கள் ஒட்டியுள்ளன என ரசிகர்கள் சாடுகின்றனர். இதுவே இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் சிறந்த கதைகளுடன் பான் இந்திய படங்கள் வெளியாகும் நிலையில், தமிழ் சினிமா ஜென்-ஸி அடிப்படையிலான சுலபக் கதைகளில் சிக்கிக்கொண்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. “பிக் பாஸ் போட்டியாளர்களைப் போல தமிழ் படங்களும் மாறிவிட்டன” என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.