நடிகை தேவயானி தனது முதல் குறும்படமான ‘கைக்குட்டை ராணி’யை தயாரித்து இயக்கியுள்ளார். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த குறும்படத்திற்கு ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த 20 நிமிட குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை பேசுகிறது. அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கும் சூழலில் தாயை இழந்த பெண் குழந்தை சந்திக்கும் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் படம். இந்த குறும்படம் 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
இதுபற்றி விவரித்த தேவயானி, “எவ்வளவு படங்களில் நடித்திருந்தாலும், நான் இயக்கிய முதல் குறும்படத்துக்கே விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.