தெலுங்கில் பிரபல நடிகர் நானியின் தயாரிப்பு நிறுவனமான வால் போஸ்டர் சினிமா தயாரித்த “Court: State vs A Nobody” திரைப்படம் ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டு ரூ.58 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றிப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஹிந்தியில் வெளியான “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கி, தனது மகன் பிரசாந்தை வைத்து “அந்தகன்” என்ற பெயரில் படமாக்கி நல்ல வரவேற்பு பெற்றிருந்தார். தற்போது தியாகராஜன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகை தேவயானியின் மகள் இனியாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “சரிகமப” நிகழ்ச்சியில் தேவயானியின் மகள் இனியா பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாரம்பரிய உடைகளில் தோன்றி, தேவயானியைப் போலவே பாசிட்டிவ் இமேஜை வெளிப்படுத்தியுள்ள இனியா, சினிமா ஹீரோயின் ஆகும் வாய்ப்பை பெற உள்ளதாக பேசப்படுகிறது.
இந்த ரீமேக் படத்தில் தெலுங்கில் “மெருவள்ளி ஜாபிலி” கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவியின் பாத்திரத்தையே தமிழில் இனியா செய்யப்போகிறார் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவயானி முன்னதாக பிரசாந்துடன் “அப்பு”, “கல்லூரி வாசல்” போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது மகளும் அதே நடிகருடன் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த வாய்ப்பு இனியாவுக்கு ஒரு “ஜாக்பாட்” எனக் கருதப்படுகிறது. ரசிகர்கள் சினிமா வாயிலாக தேவயானியின் மகளை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இனியாவின் அறிமுகம் குறித்து உறுதி செய்யும் அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.