சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமன்றி தென்னிந்தியா, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது குபேரா திரைப்படம் வெளியீட்டிற்கு தயார் நிலையில் இருக்க, இணையத்தில் அவரது சினிமா பயணத்தின் முக்கிய கட்டங்களை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவரது முதல் படம் ‘துள்ளுவதோ இளமை’ எதிர்ப்புகளுடன் வெளியானாலும் சிறு வெற்றியையே பெற்றது. அதன்பின்னர் தனது சகோதரர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் தனுஷின் நடிப்பை பேசவைத்தது. திருடா திருடி, தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களும் வெற்றி பெற்றன.

2007ல் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படம் தனுஷை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அதனுடன் யாரடி நீ மோகினி, ஆடுகளம், வேங்கை, மாப்பிள்ளை, மயக்கம் என்ன போன்ற படங்களும் தொடர்ந்து ஹிட் ஆனவை. 2012ல் “3” படத்தின் மூலம் ‘ஓய் திஸ் கொலவெறி’ பாடல் உலகளாவிய பிரபலமடைந்தது. இது பாலிவுட் வாய்ப்பைத் திறந்தது. ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.
தனது 25வது படம் வேலையில்லா பட்டதாரி மாபெரும் ஹிட் ஆனது. இப்படம் தனுஷை அனைத்து தரப்பினரிடமும் சிறந்த நடிகனாராக மாற்றியது. தனது 50வது படமாக ராயன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். விசாரணை போன்ற படங்கள் தேசிய மட்டத்தில் பெரும் அங்கீகாரம் பெற்றன.
ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்தின் மூலம் தனுஷ் காலடி வைத்தார். மேலும், தெலுங்கில் நடித்த வாத்தி படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது குபேரா படம் தயாராக, இட்லி கடை என்ற படத்தை இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். தனுஷின் சினிமா சாதனைகள் இன்று ரசிகர்களிடம் பெருமையாக பேசப்படுகின்றன.