சென்னை: என் பேரன் பவிஷை படிக்கும்ோதே நடிக்க அழைத்து சென்று விட்டார் தனுஷ் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழில் என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட சில கிராமத்து படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இவருக்கு இரண்டு மகன்களும், இரு மகள்களும் உண்டு. இவரின் மூத்த மகன் செல்வராகவனும், கடைசி மகன் தனுஷும் துள்ளுவதோ இளமை என்கிற ஒரே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்கள். மிகவும் பணக்கஷ்டத்தில் இருந்தார் கஸ்தூரி ராஜா. எனவே, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு போய்விடலாம் என்கிற முடிவில் அவர் இருந்தபோது ‘மினிமம் பட்ஜெட்டில் ஒரு படம்.. நான் இயக்குகிறேன்.. இதுக்கு மட்டும் பணம் ரெடி பண்ணு கொடுங்க.. படம் ஓடலன்னா சொந்த ஊருக்கு போய்டலாம்’ என செல்வராகவன் சொல்ல ஒரு வீட்டை விற்று பணம் கொடுத்தார் கஸ்தூரி ராஜா.
அப்படி எடுத்த துள்ளுவதோ இளமை படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தது. ‘இந்த படத்தில் ஆபாச காட்சிகள் அதிகமாக இருக்கிறது. வயசு பையன்கள் கெட்டுப்போவார்கள். இப்படத்தை தடை செய்ய வேண்டும்’ என சிலர் பொங்க அதுவே படத்திற்கு புரமோஷனாக அமைந்துவிட்டது. அதன்பின் தனுஷ் முக்கிய நடிகராகவும், செல்வராகவன் முக்கிய இயக்குனராகவும் மாறினார்கள். தனுஷ் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தயாரிப்பாளராகவும் மாறினார். மேலும், இதுவரை 3 திரைப்படங்களை இயக்கியும் விட்டார். செல்வராகவன் படங்களே இப்போது ஓடாத நிலையில் தனுஷ் இயக்கி வெளியான பவர் பாண்டி மற்றிம் ராயன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கஸ்தூரி ராஜா ‘என் பேரன் பவிஷ் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் மூலம் நடிக்க துவங்கிவிட்டான். எங்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை சினிமாவுக்கு வந்துவிட்டது. அவன் 12ம் வகுப்பு படித்து வருகிறான். நன்றாக படிக்கும் மாணவன் அவன். ஆனால், அவனின் மாமா தனுஷோ பவிஷின் படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க கூட்டிகொண்டு போய்விட்டார்’ என பேசியிருக்கிறார்.