சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குபேரா திரைப்படம், தனுஷின் நடிப்பால் தெலுங்கு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானாலும், தெலுங்கில் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கண்டது. இதனால், தனுஷ் மீது தெலுங்கு திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், தனுஷ் தன்னால் அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்த புதிய தெலுங்கு படத்திலும் நடிக்க முடியாது என மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்குக் காரணம், தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கிறார என்பதுதான். ‘இட்லி கடை’, ‘போர் தொழில்’, ‘தமிழரசன்’, ‘விக்னேஷ் ராஜா படம்’, ‘வெற்றிமாறன் – வடசென்னை 2’, ‘மாரி செல்வராஜ் – புதிய படம்’, ‘இளையராஜா பயோபிக்’ என தொடர்ச்சியாக திட்டமிட்ட படங்கள் அவருடைய கால அட்டவணையில் நிறைந்துள்ளன. அதனால், புதியதாக எந்த ஒரு படத்திலும், குறிப்பாக தெலுங்கு படங்களில் நடிப்பது சாத்தியமில்லை என அவர் தெளிவாக கூறிவிட்டார்.
தனுஷின் வாத்தி மற்றும் குபேரா ஆகிய இரண்டு நேரடி தெலுங்கு படங்களும் பெரிய வெற்றியை பெற்றதால், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் அவருக்கான மார்க்கெட் பலமடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்கள் தனுஷின் நடிப்பை பாராட்டி தேசிய விருது கிடைக்கும் என கூறியிருக்கின்றனர். ஆனால், கால்ஷீட் இல்லாததால் தனுஷ் வருத்தத்துடன் ‘நோ’ சொல்லும் நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழில் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். குபேரா திரைப்படத்தில் தனுஷ் செய்த நடிப்பு சவால்களை, தமிழ் ரசிகர்கள் சரியாக பாராட்டவில்லை என்ற ஏக்கம் அதிகமாக உள்ளது. தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுகிற அளவுக்கு, தமிழில் அந்த வரவேற்பு இல்லாமல் போனது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.