சென்னை: இந்தியன் 2 திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான “இந்தியன் 2” திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான “இந்தியன்” படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடம் இருந்து நிரைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் படி சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஷங்கர் பதிலளித்துள்ளார் அதில் அவர் “இந்தியன் 2 திரைப்படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வரும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. இதனால் நான் என்னுடைய சிறந்த மற்றும் கடின உழைப்பை கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 திரைப்படத்திற்கு அளித்துள்ளேன். இந்தியன் 3 திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும். கேம் சேஞ்சர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது. ராம் சரணுக்கு மிகப்பெரிய கதாபாத்திரமாக அமைந்துள்ளது இப்படம். ” என கூறியுள்ளார். கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.