சென்னை: சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஆளுமை. ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்திருந்த அவர் கண்களாலேயே கவர்ச்சியை காண்பித்து கிறங்கடித்தவர்.அதனால்தான் அவருக்கு இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் வாழ்க்கை தொடர்பான திரைப்படங்களும், அவரது புகைப்படங்கள் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்தச் சூழலில் சில்க் ஸ்மிதா பற்றி நடிகரும், இயக்குநருமான ஜி.எம்.குமார் பேசியிருக்கிறார். விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்டவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர் குடும்ப வறுமை காரணமாக தமிழ்நாட்டுக்கு வந்தவர். அதன் பிறகு அவர் இந்திய சினிமாவை ரூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சில்க் கால்ஷீட் கிடைத்தால் போதும் படம் வெற்றிபெற்றுவிடும் என்பதே அப்போதைய நிலையாக இருந்தது.
தமிழ் சினிமாவில் பல கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கிறார்கள்; வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கவர்ச்சியை அழகாகவும், அளவாகவும் உடலில் மட்டுமில்லாமல் கண்களிலும் காட்டுவது சில்க் ஸ்மிதாவால் மட்டும்தான் முடிந்தது.
தமிழில் அவர் வினுசக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் அவர் ஏற்றிருந்த சில்க் என்ற கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கட்டுண்டதால் ஸ்மிதா என்ற பெயருடன் சில்க் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. அப்போதிருந்து அவர் சில்க் ஸ்மிதாவாக மாறினார். சில்க் ஸ்மிதா தமிழில் அறிமுகமானாலும் தமிழ் மட்டுமின்றி இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் எதையும் உடனே பிடித்துக்கொள்ளும் திறமை சில்க் ஸ்மிதாவுக்கு இயற்கையிலேயே இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரால் பல மொழிகளிலும் எளிதாக நடிக்க முடிந்தது.
ஒருமுறை மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு கேரளா செல்ல நேரம் இல்லாததால் மோகன் லால் சென்னை வந்து சில்க்குடன் நடனம் ஆடிவிட்டது சென்றதெல்லாம் சில்க்கால் மட்டுமே படைக்க முடிந்த வரலாறு. இயக்குநர்களில் பாலுமகேந்திரா எப்போதும் தனித்துவமானவர். அவரது இயக்கத்திலும், கேமராவிலும் நடித்தால் சாதாரண அழகிக்கூட பேரழகியாக தெரிவர். அப்படிப்பட்ட சுழலில் இயற்கையாகவே பேரழகியாக இருக்கும் சில்க பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் பூர்ணம் விஸ்வநாத்துக்கு ஜோடியாக நடித்தார். அதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் சில்க் எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் அடங்காதவர் என்று.
குமார் பேட்டி: தொடர்ந்து கரியரின் பீக்கில் இருந்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவர் குறித்து நடிகரும், இயக்குநருமான ஜி.எம்.குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “சில்க் ஸ்மிதா மீது எனக்கு மிகப்பெரிய க்ரஷ் இருந்தது என்பது உண்மை. அவர் மிகச்சிறந்த மனிதாபிமானம் கொண்டவர். அனைவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவர் இருந்தார்.
மேலும் தன்னை முழுமையாக பார்த்துக்கொள்ளும் உண்மையான காதல் ஒன்றையும் அவர் தேடினார். சில்க் ஸ்மிதாதான்: நான் அந்த சமயத்தில் எனது மனைவியான பல்லவியுடன் சீரியஸான லவ்வில் இருந்தேன். ஒருவேளை நான் மட்டும் எனது மனைவியை காதலிக்காமல் இருந்திருந்தால் சில்க் ஸ்மிதாவை காதலித்து கண்டிப்பாக திருமணம் செய்திருப்பேன்” என்றார். ஜி.எம். குமார் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பதும்; நான் கடவுள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.